முந்தைய ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற 6 கட்சிகள், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கட்சி தொடங்குவதற்காக நேற்று மீண்டும் ஒன்றாக இணைந்தன.
புதிய கட்சியின் தலைவராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். புதிய கட்சி யின் சார்பில் நாடாளுமன்ற தலை வராகவும் முலாயம் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள முலாயம் சிங் யாதவ் வீட்டில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி), மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) மற்றும் சமாஜ்வாதி ஜனதா (எஸ்ஜேபி) ஆகிய 6 கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அனைவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது, “நாங்கள் ஒரு அமைப்பாக இணைந்துவிட்டோம். புதிய கட்சி யின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்ட இதர அம்சங்களை முடிவு செய்ய 6 உறுப்பினர் களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவ கவுடா (ஜேடிஎஸ்), லாலு பிரசாத் யாதவ் (ஆர்ஜேடி), ஓம் பிரகாஷ் சவுதாலா (ஐஎன்எல்டி), சரத் யாதவ் (ஜேடியு), ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாதி), கமல் மொரார்க்கா (எஸ்ஜேபி) உள்ளிட்டோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இதுகுறித்து முலாயம் சிங் கூறியதாவது:
தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நரேந்திர மோடி தலைமையிலான அரசை எதிர்கொள்ள தேசிய அளவில் ஒரு கட்சி அவசியமாகிறது. அதற்காக பல ஆண்டுகளாக பிரிந்திருந்த நாங்கள் அனைவரும் மீண்டும் இணைந்து புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளோம். இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாங்கள் பணியாற்றுவோம்.
இதற்கு முன்பு நாங்கள் எப்போ தெல்லாம் ஒன்றாக இணைந் தோமோ அப்போதெல்லாம் மத்தி யில் ஆட்சி அமைத்துள்ளோம். அதுபோல இந்த முறையும் நாங்கள் டெல்லியைக் கைப்பற்று வோம் என்று உறுதி கூறுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு 1975, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் மத்தி யில் ஆட்சியைப் பிடித்தன. எனினும், எந்த அரசும் 5 ஆண்டு களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது.
இதையடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிஹார், உ.பி.யில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனால் எதிரும் புதிருமாக இருந்த லாலு பிரசாத்தும் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் கைகோர்த்தனர்.
அத்துடன், தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்காக பிரிந்திருந்த ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று முறைப்படி இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த புதிய கட்சிக்கு முதல் சோதனைக் களமாக இருக்கப் போவது பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்தான். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அங்கு தேர்தல் நடக்க உள்ளது.
ஜனதா கட்சிகள் இணைந்தது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஜேடியு மூத்த தலைவர்கள் நிதிஷ் குமார், சரத் யாதவ், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர்.