இந்தியா

நள்ளிரவு ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணிக்கிறது

பிடிஐ

ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் சதுர்வேதி, ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பிற தலைவர்களைச் சந்தித்த பின்னர் எடுக்கப்பட்டிருக்கிறது.

மற்ற கட்சிகளோடு கலந்து ஆலோசித்த காங்கிரஸ் கடைசி வரை ஜிஎஸ்டி அறிமுக நிகழ்வில் கலந்துகொள்ளலாமா, வேண்டாமா என்று யோசித்து வந்தது.

ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு ஜூன் 30ம் தேதி நள்ளிரவில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது என்று மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, ''போதுமான கால அவகாசம் கொடுக்காமல் இத்தனை அவசரமாக அமல்படுத்துவது ஏன் என்றும், எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜிஎஸ்டியை எதிர்த்த பாஜக இப்போது அதை ஆதரிப்பது ஏன்?'' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கூறும்போது, சில தலைவர்கள் ஜிஎஸ்டி மசோதா காங்கிரஸின் குழந்தை. அதனால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினர். ஆனால் இன்னும் சில தலைவர்கள் நாம் அளித்த நிறைய பரிந்துரைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.

இதனால் சிறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சரியாக இருக்காது என்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி நிகழ்வைப் புறக்கணிக்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT