சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகிறது. அவரின் முதலாண்டு நினைவுநாளையொட்டி, கர்நாடக முற்போக்கு சிந்தனையாளர்கள் சார்பாக பெங்களூருவில் நேற்று கண்டன கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கர்நாடக முன்னாள் அமைச்சர் லலிதா நாயக் பேசியதாவது:
கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக முற்போக்கு சிந்தனைமிக்க கருத்துகளைத் தொடர்ந்து பேசிவருகிறேன். அண் மையில் சிக்மகளூரு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘நாட்டில் மக்கள் விரும்பும் உணவை கூட உண்ணும் உரிமை இல்லை. மாட்டைப் பாதுகாப்பதாக சொல்லி மனிதர்களை இந்துத்வா அமைப்பினர் கொல்கிறார்கள். பசு பாதுகாப்பு குழுவினரும், பசுவதை தடைச்சட்டம் போடும் அரசும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என பேசினேன்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடுப்பி இந்து ஜாகர்ன வேதிகே அமைப்பைச் சேர்ந்த சுனில் என்பவர், ‘‘சிக்மக ளூரு பொதுக்கூட்டத்தையும், பசுவதை தடைச்சட்டம் குறித்த பேச்சையும் சுட்டிக்காட்டி, பசுவைக் கொல்லத் தூண்டும் உங்களைப் போன்றவர்களை வாழ விட கூடாது. உங்களுக்கு உரிய பாடம் கற்பிக்கும் வகையில் விரைவில் உங்களை கொல்லப் போகிறோம்'' என எழுதியுள்ளார். நண்பர்களின் வேண்டுகோளின்படி பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். கர்நாடக அரசு எனக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.