மத்திய அமைச்சரவை மாற்றத்தால் உ.பி.யில் பாஜகவிற்கு பலன் கிடைக்காது என சமாஜ்வாதி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் உ.பி மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து நாந்கு பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது, இந்த இரு மாநிலங்களிலும் அடுத்து வருடம் துவக்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
எனவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாற்றம் உ.பி.யின் ஆளும் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உ.பியை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த அமைச்சரான ராஜேந்தர் சவுத்ரி கூறுகையில், 'அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் வீணாக ஒரு சோதனை நடத்தப்பட்டுள்ளது. உபியில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் தன் கூட்டணிகளுடன் சேர்த்து 73 எம்பிக்கள் பெற்ற மத்திய அரசு அவர்களை வைத்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையுமே செய்யவில்லை. தனது அமைச்சரவையில் மாற்றம் செய்வதை விட, கட்சியின் ஜாதி, மதக் கொள்கைகளில் பாஜக மாற்றம் செய்திருந்தால் பலன் கிடைத்திருக்கும்' எனக் கூறியுள்ளார்.
அமைச்சரவை விரிவாக்கத்திற்காக, உ.பி.யின் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் பிரதமர் நரேந்தர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதில், ஜாதி மற்றும் மத அரசியல் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸின் மாநில செய்தி தொடர்பாளரான அமர்நாத் அகர்வால் புகார் கூறியுள்ளார்.
"சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக ஒரு அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது" என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.