இந்தியா

கேரளாவில் அதிகரிக்கும் பலாத்கார குற்றங்கள்: கடந்த ஆண்டில் 2,568 வழக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

கேரளாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கடந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2,568 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.

கொச்சி அருகே காரில் சென்று கொண்டிருந்த நடிகை பாவனாவை அவரது முன்னாள் டிரைவர் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கேரளா முழுவதும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அம்மாநில போலீஸாரின் குற்றவியல் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் படி 2015-ல் 1,263 ஆக பதிவான பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள், கடந்த ஆண்டு 1,644 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் 2015-ல் 720 ஆக பதிவான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள், கடந்த ஆண்டு 924 ஆக அதிகரித்துள்ளது.

பாலியல் பலாத்காரத்தை தவிர, துன்புறுத்தல், கடத்தல், வரதட்சிணை கொடுமை, கணவர் அல்லது உறவினர்களால் சித்திரவதை உள்ளிட்ட குற்றச்செயல்களும் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெண்களுக்கு எதிராக குற்றமிழைத்ததாக 14,061 வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிராக குற்றமிழைத்ததாக 2,899 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இதனால் மாநில அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது. இது குறித்து சமூக நீதி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறும்போது, ‘‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் புரிபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதிலும் அரசு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது’’ என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் உதவி செய்வதற்கான புதிய தொலைபேசி இணைப்பை அறிமுகம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT