பிஹார் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் தகுதியில்லாதவர்கள் மாநிலத்தில் முதலிடமும், அதிக மதிப்பெண்களும் பெறச் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி லால்கேஷ்வர் பிரசாத் சிங் இன்று (திங்கள்கிழமை) காலை கைது செய்யப்பட்டார்.
அவரது மனைவியும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுமான உஷா சின்ஹாவும் கைது செய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த இவர்கள் இருவரையும் வாரணாசியில் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டதை பாட்னா போலீஸ் எஸ்.பி. மனு மஹாராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் விரைவில் பாட்னா அழைத்து வரப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
இருவருமே வாரணாசியில் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக மனு மஹாராஜ் தெரிவித்தார்.
லால்கேஷ்வர் சொத்துகளை முடக்க ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பெற்றிருந்தது. அதன்படி அவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
தேர்வும் குளறுபடியும்:
பிஹார் மாநிலத்தில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியரிடம் உள்ளூர் 'செய்திச் சேனல்'கள் பேட்டிகண்டு ஒளிபரப்பின. ரூபி குமாரி என்ற மாணவி 12-ம் வகுப்பு கலை பாடப்பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
பேட்டியின் போது, அவரிடம் அரசியல் அறிவியல் பாடம் குறித்து கேட்கப்பட்டது. ‘அது, சமையல் கலை சம்பந்தப்பட்டது’ என மாணவி பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, 'பொலிடிக்கல் சயின்ஸ்' என்பதை, 'புரோடிக்கல் சயின்ஸ்' என உச்சரித்தார்.
இதனையடுத்து பிளஸ் 2 தேர்வில் முக்கிய இடம் பிடித்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வின் அடிப்படையில், 2 மாணவர்களின் தேர்வு முடிவை மாநில பள்ளி தேர்வு வாரியம் (பிஎஸ்இபி) ரத்து செய்தது.