எதிர்கட்சிகள் ஒத்துழைக்காததால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நீட்டிக்க இயலவில்லை என்று அமைச்சர் கமல் நாத் தெரிவித்துள்ளார். 15-வது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் கடந்த 5-ஆம் தொடங்கியது முதலே சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் இருந்தது.
தெலங்கானா விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை, டெல்லியில் அருணாச்சல் மாணவர் பலியான சம்பவம் என அவை ஒத்திவைக்கப்பட காரணங்கள் நிறையவே இருந்தன. உச்சபட்ச அத்துமீறல்களும், அவை மரபு மீறல்களும் அரங்கேறின. சீமாந்திரா எம்.பி. லகடபதி ராஜகோபால் பெப்பர் ஸ்ப்ரே தெளித்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அமளி, கூச்சல், குழப்பம், ஒத்திவைப்பு, நடவடிக்கைகள் என கூட்டத்தொடர் ஒருவழியாக முடிந்து விட்டது. அவை நடவடிக்கைகள் இதயத்தில் இருந்து ரத்தம் வழியச் செய்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்திருந்தார்.
அமளிக்கு மத்தியில் இடைக்கால ரயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட், தெலங்கானா மசோதா நிறைவேறியுள்ளன. ஆனால் ராகுல் காந்தி பரிந்துரைத்து வந்த ஊழலுக்கு எதிரான 6 மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.
இது குறித்து மத்திய அமைச்சர் கமல்நாத் கூறுகையில்: "2011-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஊழல் எதிர்ப்பு மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. இம்மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மேலும் சில நாட்கள் நீட்டிப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் விவாதித்தோம்.
கூட்டத்தொடரை நீட்டிப்பதே மத்திய அரசின் நோக்கம். ஆனால், அதற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை. ஆதனால், 15-வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரை மிகுந்த வருத்ததுடன் முடித்துக்கொள்கிறோம்." என்றார். லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஊழல் எதிர்ப்பு மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் ஊழலுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் முணைப்பு காட்டியது வெறும் வாக்கு வங்கி அரசியல் என பாஜக, இடது சாரிகள் கடுமையாக விமர்சித்தன என்பது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில், தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து மக்களவையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் இந்த நாடு முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது என்பதை நிரூபித்திருக்கிறது என்றார்.