அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு தங்கள் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்காததே காரணம் என ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியினர் போதுமான அளவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வில்லை.
கட்சியும், அரசும் வெவ்வேறு வழியில் சென்றதுதான் இதற்கு முக்கியக் காரணம்’ எனக் கூறிய அவர், கட்சிக்கும் தனது தலைமையிலான அரசுக்கும் இடைவெளி இருந்ததாகவும் ஒப்புக் கொண்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைக் குறைத்து மதிப்பிட்டதும் மற்றொரு காரணம் என ஏற்றுக்கொள்ளும் ஷீலா, ‘கெஜ்ரிவால் கட்சியினர் மீதும் ஊழல் புகார் வெளியானதால் அவரைப் பற்றி மக்கள் புரிந்து கொள்வார்கள் எனக் கருதினோம். இந்தத் தேர்தலில் நானாக பணியாற்றிக் கொண்டிருந்தேனே தவிர, யாரும் எனக்கு உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை. இதற்காக நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை’ என தெரிவித்தார்.
தொடர்ந்து மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா, இதுபற்றி மேலும் கூறுகையில், ‘இது ஒரு ஜனநாயக நாடு. மக்க ளின் தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன். டெல்லியைப் பொறுத்த
வரை நிரந்தர அரசு வேண்டும். ஆனால், அரசு அமைப்பதில் எங்க ளுக்கு எவ்வித பங்கும் இல்லை’ என்றார்.
டெல்லி தேர்தல் தோல்விக்கு ஷீலாவின் செயல்பாடுகளே காரணம் என சில காங்கிரஸ் தலை வர்கள் புகார் கூறியதையடுத்து அவர் இவ்வாறு கட்சியினர் மீது குற்றம்சாட்டி உள்ளார்.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட இவர், ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவாலிடம் 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
இவர் கூறுவதை நிரூபிக்கும் வகையில், டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் மூன்று பொதுக்கூட்டங்களிலும், சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் 2 பொதுக்கூட்டங்களிலும் மட்டுமே பிரசாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.