சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதற்கு ஆதார் அடையாள எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அணுகியுள்ளன.
அரசின் எந்தவொரு சலுகைத் திட்டம், மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அண்மையில் தெளிவுபடுத்தியது.
நீதிபதி பி.எஸ். சௌகான் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி, "சில நிறுவனங்கள் ஆதார் எண் கட்டாயம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளன. ஆதார் எண் இன்றி அரசு சலுகையைப் பெற முடியாமல் எந்த குடிமகனும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. சட்டவிரோதக் குடியேற்றவாசி ஆதார் எண்ணைப் பெறுவதற்காகப் பதிவு செய்திருக்கிறாரா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தது.
இதையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
இது தொடர்பாக பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் குஷ்பு ஜெயின் கூறுகையில், "அரசு உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பல்வேறு குழப்பங்களையும், சந்தேகங்களையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மக்கள் நேரடி மானியத் திட்டத்தில் ஆதார் எண்களைப் பதிவு செய்துள்ளனர். 235 மாவட்டங்களில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்து, அத்திட்டத்தில் இணைந்துள்ளனர் என்றார் அவர்.
'சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மானியம், முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், உரியவர்களுக்கு மானியம் சென்றடைவதை உறுதிப்படுத்தவும்தான் நேரடி மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2012-2-13 ஆம் ஆண்டுக்கு, சமையல் எரிவாயு மானியமாக ரூ. 39, 5658 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு சராசரியாக ரூ. 555.55 அரசு மானியமாக வழங்கப்படுகிறது' என பெட்ரோலியத்துறை அமைச்சகம் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இம்மனு வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.