இந்தியா

தங்கப் புதையல் வேட்டை: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் தங்கப் புதையல் தேடும் பணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

உத்தரப் பிரதேசம் தலைநகர் லக்னௌவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது உன்னாவ் பகுதியில் இருக்கும் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் கோட்டையில் 000 டன் தங்கம் இருப்பதாக கனவு கண்டதாக ஷோபன் சர்கார் என்ற சாது ஒருவர் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1000 டன் தங்கத்தைத் தேடும் வேட்டை நடந்து வருகிறது. இந்தப் பணியில், இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் உத்தரப் பிரதேச மாநில அலுவலகக் குழுவும் இவர்களுக்கு உதவியாக தேசிய புவியியல் ஆய்வகத்தின் ஒரு குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அகழ்வாய்வை நிறுத்தக் கோரியும் முறைப் படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்து. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உ.பி. அரசின் தங்கப் புதையல் தேடலில் தாங்கள் தலையிட முடியாது என்றும் அகழ்வாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

நீதிபதிகள் தங்களின் உத்தரவில், 'பரபரப்பான விவகாரங்கள் அனைத்திலும் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. ஊகத்தின் அடிப்படையில் கூறப்படும் விஷயங்கள் தொடர்பாக உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. இப்போதைக்கு மனுதாரர் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவும் பிறக்க வேண்டிய தேவை எழவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், அகழாய்வுப் பணியை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அது தொடர்பாக தனது முடிவை அறிவிக்காமல் உச்ச நீதிமன்றம் நிலுவையில் வைத்துள்ளது.

சாது சொல்லி தோண்டவில்லை: மத்திய அரசு

உத்தர பிரதேசத்தில் தங்கப் புதையல் வேட்டைக்கு சாதுவின் கனவு காரணமல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

மத்திய கலாசார துறையின் சார்பில் செய்திக் குறி்ப்பில், சில தகவல்களின் அடிப்படையில் டோண்டியா கேடா கிராமத்தில் தொடக்க கட்ட களப் பணிகளை மேற்கொள்ளுமாறு லக்னௌவின் வட்ட இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை நிறுவன கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது. அங்கு ஜி,பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி ஆய்வு செய்யும்படி தேசிய புவியியல் ஆய்வகத்திடம் அறிவுறுத்தப்பட்டது.

அந்த அமைப்பு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அங்கு அகழ்வாராய்ச்சி நடத்த லக்னெள வட்ட அலுவலகத்துக்கு அக்டோபர் 10-ல் அனுமதி அளிக்கப்பட்டது.

தேசிய புவி இயல் ஆய்வகம் தனது அறிக்கையில் காந்தப்புலன் மிக்க பகுதியான அந்த நிலத்தின் 5 முதல் 20 மீட்டர் ஆழத்தில் உலோகம் போன்ற கெட்டியான பொருள் இருக்கலாம் என கூறியிருந்தது. இதன் அடிப்படையிலேயே அங்கு பூமியைத் தோண்டிப் பார்க்க உத்தரவிடப்பட்டது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொல்லியில் ஆய்வுத் துறையின் இயக்குநர் சையது ஜமால் ஹசன் கூறும்போது, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை வரலாற்று ஆய்வுகளுக்காக அகழ்வாராய்ச்சி செய்கிறதே தவிர தங்கப் புதையலுக்காக அல்ல. தேசிய புவியியல் ஆய்வகம் அங்கு தங்கம்புதைந்திருப்பதாக உறுதியாகக் கூறவில்லை. என்னுடைய அனுபவத்தை வைத்து உறுதியாகக் கூறுகிறேன், அங்கு 1000 டன் எடையில் தங்கம் கண்டிப்பாகக் கிடைக்காது என்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT