தெலங்கானா மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தொடரப் பட்ட 690 வழக்குகள் விரைவில் ரத்தாகின்றன. இதற்கான கோப்பில் மாநில உள்துறை அமைச்சர் நேற்று கையெழுத்திட்டார்.
தனி தெலங்கானா மாநில போராட்டத்திற்கு மாணவர் களின் பங்கு மிகவும் முக்கிய மானதாக இருந்தது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாணவர்கள் தீக்குளித்தனர். மேலும் பலர் தர்ணா, சாலை மறியல், முற்றுகை, உண்ணா விரதம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முந்தைய மாநில அரசு மாணவர்கள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்தது.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் மீதான வழக்கு கள் வாபஸ் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந் தார்.
இப்போது கே. சந்திர சேகர ராவ் முதல்வராக பொறுப்பேற் றுள்ள நிலையில், மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி, ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தெலங்கானா போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து, அம்மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, மாணவர்கள் மீது தொடரப்பட்ட 690 வழக்கு களை ரத்து செய்வதற்கான கோப்பில் உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்மாரெட்டி நேற்று கையெழுத்திட்டார். எனவே, விரைவில் மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்தாக உள்ளன.