ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என வலியுறுத்தி சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் வியாழக்கிழமை பந்த் நடத்த அரசு ஊழியர் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் மற்றும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவத் துறை ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பந்த் காரணமாக, சீமாந்திரா மாவட்டங்களில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது என்றும் அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என்றும் முழு கடையடைப்பு நடத்தப்படும் என்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் உருவாக்க வகைசெய்யும் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா ஆந்திர சட்டசபைக்கு அனுப்பப்பட்டது. இதில் பல்வேறு குறைபாடு இருப்பதாகக் கூறி அதை ஆந்திர சட்டசபை நிராகரித்து திருப்பி அனுப்பியது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என குடியரசு தலைவருக்கு சீமாந்திரா எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். இறுதியில் குடியரசு தலைவரும் இதற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.