காவிரி விவகாரத்தில் செய்திகளை ஒளிபரப்பும் போதும், காட்சிப்படுத்தும் போதும் கட்டுப்பாடுடன் தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
காவிரி விவகாரத்தில் தொலைக்காட்சி சேனல்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு அது விரும்பத் தகாத செயல்களை தூண்டுமாறு அமைந்து விடக்கூடாது, எனவே செய்திகளை அதன் உண்மை நிலவரத்தை சரிபார்த்து வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரைக் குறிப்பில், “சில சேனல்கள் வன்முறைகளை மீண்டும் மீண்டும் காண்பிப்பது தூண்டுதலுக்கு இடமளித்து விடும். இதனால் பதற்றமே அதிகரிக்கும், மேலும் இருமாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையே இத்தகைய ஒளிபரப்புகள் செய்யும்.
இது குறித்து தகவல் ஒலிபரப்பு அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஊடகங்கள் கட்டுப்பாடுடனும் பொறுப்புடனும் செயல்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். இருமாநிலங்களிலும் நிலைமைகள் சகஜ நிலைக்குத் திரும்ப ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
கேபிள் நெட்வொர்க்குகள் செய்திகளை வெளியிடும்போதும், காட்சிப்படுத்தும் போதும், வன்முறைகளைத் தூண்டுமாறு அமைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
வன்முறைகளை நேரலையாகவோ, கோப்புப் படங்கள் மூலமாகவோ காண்பிப்பதை தவிர்க்கலாம். பதிலாக, காவிரி நதி அல்லது பாதுகாப்பு படை போன்றவற்றைக் காண்பிக்கலாம்.
1995-ம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க் கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிமுறைகளைக் கடைபிடித்து சூழ்நிலையின் காரண காரியம் அறிந்து செயல்பட வெண்டும்” என்று கூறியுள்ளது.