தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை நிலஅதிர்வு ஏற்பட்டது. 3 மணி நேர இடைவெளியில், நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
முதலில், இன்று அதிகாலை 12.41 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.1- ஆக பதிவானது. பின்னர் 3.3, 2.5 மற்றும் 2.8 என்ற அளவில் முறையே அதிகாலை 1.41, 1.55, 3.40 ஆகிய நேரங்களில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேசான நிலஅதிர்வு என்பதால் கட்டடங்கள் குலுங்கியனவே தவிர பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளிலேயே விடியும் வரை தங்கினர்.