மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 9-ல் இருந்து 12-ஆக உயர்த்தப்பட வாய்ப்பில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரி வாயு சிலிண்டர் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 வீதம், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த உச்சவரம்பை 12 ஆக உயர்த்தும்படி கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி, ஆண்டுக்கு 9 மானிய விலை சிலிண்டர் வழங்கப்படுவதால் 90% வாடிக்கையாளர்கள் பயன் பெறுகின்றனர், 10 % வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மானியம் கிடைப்பதில்லை. எனவே மத்திய அரசின் இந்த முடிவை மக்கள் வரவேற்பார்கள் என்றார்.
மானிய விலை சிலிண்டர்களுக்கான உச்சவரம்பை 12 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.