மும்பை தாக்குதல் 5-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை ஒட்டி மும்பை காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பிருதிவிராஜ் சவுகான் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்நீத்த போலீஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பைக்குள் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் தாஜ், டிரைடண்ட் போன்ற நட்சத்திர ஓட்டல்களில் தாக்குதலில் ஈடுபட்டனர். பொதுமக்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், போலீஸ் அதிகாரிகள், தேசிய பாதுகாப்புப் படை வீரர் என பலர் உயிரிழந்தனர்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவனான அஜ்மல் கசாபிற்கு புனே ஏர்வாடா சிறையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.