சுத்தம், சுகாதாரம் இவை ஒரு முறை பிரச்சாரத்தோடு நிறுத்திக் கொள்ளப்பட வேண்டியது அல்ல. இந்த கொள்கையைக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அஜய் சங்கர் பாண்டே கடந்த 4 ஆண்டுகளாக அவரது அலுவலகத்தை அவரே பெருக்கி சுத்தம் செய்து வருகிறார்.
டாக்டர் அஜய் சங்கர் பாண்டேவின் அலுவலகத்தின் வெளியில் ஒரு பதாகை தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதில், 'இந்த அறை என்னால் சுத்தப்படுத்தப் படுகிறது. இவ்விடத்தை அசுத்தம் செய்து என் பணிச்சுமையை அதிகரிக்காதீர்கள்' என எழுதப்பட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை 'தூய்மை இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அஜய் சங்கர் பாண்டே போன்றவர்களின் அறிமுகம் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் நமது பங்கு என்ன என்பதை நன்கு உணர்த்துகிறது என்றே சொல்ல வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் கூடுதல் ஆணையராக இருக்கும் டாக்டர் அஜய் சங்கர் பாண்டே ஐ.ஏ.எஸ், ஒவ்வொரு நாளும் தனது அலுவலகத்திற்கு குறித்த நேரத்தைவிட சற்று முன்னதாகவே வந்துவிடுகிறார். தனது அறையை அவரே சுத்தம் செய்கிறார்.
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில்: சுத்தம் என்பது நமது தினசரி கடமை. இன்று அனைவரும் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். இந்த வேளையில், சுத்தம், சுகாதாரம் என்பன ஒரு பழக்கம், அதை தினசரி கடைபிடிக்க வேண்டும். நாம் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது கடமை. சுத்தம் செய்வது என்பது குறிப்பிட்ட சிலரின் வேலை என்ற பார்வை இந்தியர்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுகிறது. நம் குடும்பத்துக்குள்ளேயும்கூட வீட்டுப் பெண்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது நாம் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பது போல் இருக்கின்றோம். இந்த எண்ணம் மாற வேண்டும்" என்றார்.
படிக்கும் காலத்தில் இருந்தே தான் இருக்கும் இடத்தை தானே சுத்தம் செய்யும் பழக்கத்தை பாண்டே கொண்டிருக்கிறார்.
சுத்தம் செய்ய தயக்கம் வேண்டாம்:
நமது பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள நாம் எப்போதும் தயங்கக் கூடாது என கூறிய பாண்டே தனது அனுபவத்தை எடுத்துரைத்தார். அவர் கூறியதாவது: "ஆக்ராவில், பணியாற்றிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதி மக்கள் பலரும் என்னிடம் வந்து புகார் மனு அளித்தனர். ஆனால், துப்புரவுத் தொழிலாளர்கள் வைத்திருந்த கோரிக்கையோ உடனடியாக நிறைவேற்றக் கூடியதாக இல்லை. எனவே, அந்தப் பகுதியை சுத்தம் செய்ய நான் தயாராக இருப்பதாகக் கூறினேன். உடனே துடைப்பத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். எனக்கு ஆதரவாக பொதுமக்களும் இணைந்தனர். அந்தப் பகுதியே சுத்தமானது. எனது செய்கையைப் பார்த்து துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு திரும்பினர்" என்றார்.
சுத்தம், சுகாதாரம் இவை ஒரு முறை பிரச்சாரத்தோடு நிறுத்திக் கொள்ளப்பட வேண்டியது அல்ல என்பது எப்போதுமே அவரது கொள்கையாக இருக்கிறது.
-தமிழில் பாரதி ஆனந்த்