பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது கருப்பு மை வீசப்பட்டது மிதமான ஜனநாயக முறையிலான போராட்டம் என சிவசேனா தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறும்போது, "குல்கர்னி மீது மை வீசப்பட்டதா? தார் வீசப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது? பொதுமக்கள் கோபம் எப்படி வெடிக்கும் என்பதையும் கூறமுடியாது.
இருப்பினும் 'மை' வீசி தாக்குதல் நடத்துவது என்பது மிதமான போராட்டமே. ஜனநாயக நெறியிலான போராட்டமே. எங்கள் எதிர்ப்பையும் மீறி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றால் நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
| பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது மும்பையில் கருப்பு மை வீசப்பட்டது. சிவசேனா கட்சியினர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. - முழு விவரம்:> பாக். தலைவர் வருகைக்கு சிவசேனா எதிர்ப்பு: மும்பையில் நூல் வெளியீட்டு ஒருங்கிணைப்பாளர் மீது கருப்பு மை வீச்சு |
அத்வானி, கிரண் ரிஜிஜூ கண்டனம்:
அத்வானி | கோப்புப் படம்: பிடிஐ
இந்நிலையில் சிவ சேனா செய்கைக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "இச்செயலை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த சில நாட்களாக, ஒரு தனி மனித கருத்தையோ அல்லது தனி நபரையோ சகித்துக்கொள்ள முடியாவிட்டால் வன்முறையை கடைபிடிக்கும் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதை, தேசம் மிகக் கவனமாக கையாள வேண்டும்.
ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை மிகவும் அவசியமானது. ஜனநாயகத்தில், மாற்றுக் கருத்தை தெரிவிக்கவும் இடம் அளிக்கப்பட வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறும்போது, "எதிர்ப்புப் போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், உடல் ரீதியாக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது ஏற்புடையதல்ல" எனக் கூறியுள்ளார்.