இந்தியா

கேஜ்ரிவால் விரைவில் நீண்ட காலம் சிறையில் செலவழிக்க இருக்கிறார்: சுப்ரமணியன் சுவாமி

ஏஎன்ஐ

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விரைவில் நீண்ட காலம் சிறையில் செலவழிக்க இருக்கிறார் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து சுப்ரமணிய சுவாமி செவ்வாய்க்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "கேஜ்ரிவால் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் ஒரு 420. கேஜ்ரிவால் தன்னை தற்காத்து தப்பித்துக் கொள்ள இனி வழியில்லை. அவர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் கேஜ்ரிவால், நீண்ட காலம் சிறையில் செலவழிக்க இருக்கிறார். கேஜ்ரிவால் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து சிபிஐ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, டெல்லி ஆம் ஆத்மி அரசில் தண்ணீர், சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா சனிக்கிழமை அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கபில் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் கேஜ்ரிவால், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைத்தார்.

கேஜ்ரிவாலிடம் சத்யேந்திர ஜெயின் ரூ.2 கோடி கொடுப்பதை பார்த்ததகாவும், அதை பார்த்த பிறகுதான் கபில் மிஸ்ரா வெளியேறியதாகவும் இதுகுறித்த விவரங்களை ஆளுநர் அனில் பைஜாலிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கபில் மிஸ்ரா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான புகார் மனுவை டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்து கபில் மிஸ்ரா வழங்கினார். ஆனால், அந்த புகார் மனு ஊழல் தடுப்புத் துறைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது இன்னும் அனுப்பப்படவில்லை என்றும் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்தப் புகார் மனுவை நேரடியாக சிபிஐ-க்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகை வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT