இந்தியா

ஐந்தில் 4 மாநிலங்களில் ஆட்சி அமைப்போம்: பாஜக தலைவர் அமித் ஷா உறுதி

செய்திப்பிரிவு

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பாஜக, ஐந்தில் 4 மாநிலங்களில் ஆட்சியமைக்கும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “ஐந்தில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கும். சுதந்திரத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மிகவும் வலுவான தலைவர் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அப்படியில்லை என்று கூறியவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பலத்த பதிலை அளித்துள்ளன.

எதிர்காலத் தேர்தல்களை செயல்படும் அரசியலே வழி நடத்தும். உ.பி. வளர்ச்சி இந்திய வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இரட்டை இலக்க வளர்ச்சியை உ.பி.யின் வளர்ச்சியின்றி நாம் யோசிக்கவியலாது.

மக்கள் எங்கள் மீது காட்டிய நம்பிக்கைக்கு நிச்சயம் நியாயம் கற்பிக்குமாறு ஆட்சி செய்வோம்.

பஞ்சாபில் கட்சியின் தோல்வியை ஆய்வு செய்வோம். இது எங்களுக்கு மகிழ்வான தருணம், இந்திய அரசியலை இந்த முடிவுகள் மாற்றும்.

நாம் இந்து-முஸ்லிம் அரசியலை விட்டு வெளியே வர வேண்டிய தேவை உள்ளது. அனைவரும் விரும்புவது செயல்திறன் மற்றும் வளர்ச்சியே.

மாயாவதி தற்போது உள்ள மனநிலையை புரிந்து கொள்கிறேன். மின்னணு வாக்கு எந்திரம் குறித்த அவரது கருத்து குறித்து நாங்கள் எதுவும் கூற விரும்பவில்லை.

ரூ.500, 1000 நோட்டுகள் மீதான மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரச்சார உத்தி கடும் பின்னடவைக் கண்டுள்ளது. சாதி, மத அரசியல் இல்லாத ஒரு அரசியல் பாதைக்கு இந்த தேர்தல் முடிவுகள் வழிகாட்டியுள்ளன” என்று கூறிய ஷா மக்களுக்கு நன்றிகளையும், ஹோலிப் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT