இந்தியா

மோடியிடம் சந்திரபாபு, சந்திரசேகர ராவ் உறுதி

என்.மகேஷ் குமார்

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜக சார்பில் தற்போது பிஹார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவிடம் தொலைபேசியில் பேசினார். இதற்கு நாயுடு, ‘தாங்கள் மிகச்சரியான நபரை நாட்டின் உன்னதமான பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதற்கு என்னுடைய முழு ஆதரவைத் தெரிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வெளிநாட்டிலிருந்து வந்ததும், அவரிடம் பேசி அவரையும் ஆதரவு தருமாறு கோருகிறேன்’ என மோடியிடம் நாயுடு உறுதி அளித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவிடமும் நேற்று மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தருமாறு கோரினார். இதற்கு சந்திரசேகர ராவ், ‘தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தலித் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததை யொட்டி, தானும் ஆதரவு அளிப்பதாக’ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT