இந்தியா

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

செய்திப்பிரிவு

கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக் கப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத னால், இரு மாநிலங்களிலும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள், மறியல், தர்ணா போன்ற சம்பவங்கள் நடப்பது இரு மாநில சட்டம் ஒழுங்கையும் பாதித்து வருகிறது. ஏற்கெனவே, தமிழகம் கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் இச்சம்பவம் மேலும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு மாற்றியதில் ஒரு நோக்கம் இருந்தது. வழக்கின் விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களை கர்நாடகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கைதிகள் மாற்றல் சட்டம் 1950, பிரிவு 3-ன் படி கைதிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாம்.

எனவே, இரு மாநில அமைதி, மக்களின் நலன் கருதி கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஜெயலலிதாவை சென்னை மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT