இந்தியா

பெங்களூரிலும் அம்மா உணவகம்: முதல் நாளில் 6,600 இட்லிகள் விற்பனை

இரா.வினோத்

தமிழக‌த்தில் இருப்பதுபோலவே, பெங்களூரிலும் 'அம்மா உணவகம்' என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி ஒருவர் தொடங்கி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் முதல் நாளிலேயே 6,680 இட்லிகள் விற்பனையாகி பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய 'அம்மா உணவகம்' பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த உணவகங்களில் ரூ.1-க்கு ஒரு இட்லி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணராஜு கூறியதாவது:

1985-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெங்களூரில் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறேன். இந்த ஆண்டு அவரது 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை பெங்களூரில் உள்ள கலாசிபாளையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

எனக்கு சொந்தமான கட்டிடத்திலேயே இதைத் தொடங்கி உள்ளேன். இங்கு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை இட்லி மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் மலிவு விலை உணவகங்களைத் திறக்க வேண்டும் என வருகிற 23-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம் என்றார்.​

SCROLL FOR NEXT