இந்தியா

காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல்தான் பிரதமர்: உலக பொருளாதாரப் பேரவை ஆண்டுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

செய்திப்பிரிவு

பாஜகவையும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரையும் கடுமையாக சாடிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இதுவரை தேர்தல்களில் தமது கட்சி சார்பில் இஸ்லாமியர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தாது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதாரப் பேரவை ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெறாது என்று தாம் கணிப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி மீது தாக்கு

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி குறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், இந்தியாவில் 'கும்பல் சார்ந்த ஜனநாயகம்' நீடிக்க இடமில்லை என்றும், கட்சி சார்ந்த ஜனநாயகத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுமே தவிர, கட்சியை விட தனி நபர் பெரிதல்ல என்றும் கூறினார்.

மேலும், கட்சியை விட தனி நபர் வலிமையாக இருக்கும் நிலை கூடாது என்றும், மக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலம் போன்று கட்சி செயல்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

பாஜக, மோடி மீது சாடல்

இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக பாஜக மீது குற்றம்சாட்டிய சிதம்பரம், "குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் இதுவரை தனது கட்சி சார்பில் இஸ்லாமியர் ஒருவரை வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தியதே இல்லை. அதன் அர்த்தம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

பாரதிய ஜனதா கட்சி குறித்து அவர் கருத்து கூறும்போது, "இந்தியாவின் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாஜக செயல்படவில்லை. நாட்டின் பல பகுதிகளில் அக்கட்சி செயல்பாட்டிலேயே இல்லை" என்றார்.

அடுத்த பிரதமர்?

நாட்டின் அடுத்த பிரதமர் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, "காங்கிரஸ் மீண்டும் அரசு அமைத்தால், ராகுல் காந்திதான் பிரதமர் ஆவார் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.

பிரதமர் பதவிக்கு உரிய உத்வேகமும் திறனும் ராகுல் காந்தியிடம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

அதேவேளையில், இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் முழுமையான வெற்றியும், பெரும்பான்மையும் பெறாது என்றே தாம் கணிப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் காங்கிரஸ் நிலையால் கவலை

தமிழக அரசியல் நிலை குறித்து விவரித்தவர், "நான் அரசியலில் நுழைந்த கால கட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸைத் தோற்கடித்து திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர், திமுக இரு கட்சிகளாக பிரிந்து, இப்போது வரை அக்கட்சிகளே மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி நிலை வருத்தமளிக்கிறது" என்றார் ப.சிதம்பரம்.

SCROLL FOR NEXT