ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி பயிற்சி வழக்குரைஞருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், பாஜக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் சமூக வலைப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள, மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்: "மனித உரிமையை மீறிய நபர் எப்படி மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்க முடியும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் ஏ.கே.கங்குலி மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கவலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வழக்குரைஞர் கடந்த மாதம் புகார் கூறியிருந்தார்.
அவரது புகார் குறித்து விசாரிப்பதற்காக 3 நபர் குழுவை சென்ற மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் அமைத்தது.
விசாரணையின் போது,ஏ.கே. கங்குலி தான் பாலியல் தொல்லை கொடுத்தவர் என 3 நபர் குழுவிடம் பெண் பயிற்சி வழக்குரைஞர் தெரிவித்தார்.