செல்போன் மூலம் முன்பதிவு செய்து ஏழுமலையானைத் தரிசிக்கும் வசதி விரைவில் அறிமுகமாகப் போவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் நிருபர்களிடம் சாம்பசிவ ராவ் கூறியதாவது:
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக விரைவில் மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளோம். இதன்மூலம் பக்தர்கள் எளிதாக முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்ய முடியும். அத்துடன் லட்டு பிரசாதங்கள் பெறுவது, தங்கும் அறைகளை முன்பதிவு செய்வது, இ-உண்டியலில் காணிக்கை அளிப்பது ஆகியவையும் சுலபமாகி விடும். ஏற்கெனவே ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெரும்பாலான பக்தர்கள் மொபைல் போன் மூலமாகவே முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் தரிசனத்துக்கான மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டால் இடைத்தரகர்கள் பிரச்சினை முற்றிலுமாக ஒழியும். கள்ளச்சந்தை லட்டு விற்பனையும் தடுக்கப்படும்.
வரும் பிப்ரவரி 3-ம் தேதி ரதசப்தமி விழா நடைபெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.