இந்தியா

ஒரே எண்ணில் இரு மொபைல் கனெக்ஷன்!- இப்படி நடப்பது சாத்தியமா?- ஆம் ஆத்மி விளம்பரத்தால் தொல்லைக்கு ஆளான இளைஞர்

செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சியில் சேர அர்விந்த கேஜ்ரிவால் அறிவித்த தொலைபேசி எண்களில் ஒன்று மகாராஷ்டிர இளைஞருக்கும் வழங்கப்பட்டுள்ளதால் நாள் தோறும் வரும் “மிஸ்டு கால்” களால் அவர் அவதிக்கு ஆளாகி வருகிறார்.

வரும் ஜனவரி 26 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சியில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார். இதை யொட்டி சில தொலைபேசி எண் களையும் அவர் அறிவித்தார். இந்த எண்களுக்கு “மிஸ்டு கால்” கொடுத்தால், கட்சியின் உறுப்பினராவதற்கான தகவல் கிடைக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில், இவ்வாறு அறிவிக்கப்பட்ட எண்களில் ஒன்று மகாராஷ்டிர மாநிலம், ஜல்காவ்னின் பஸ் நிலையத்தின் அருகில் மொபைல் ரீசார்ஜ் கடை வைத்திருக்கும் அமித் எனும் இளைஞரிடமும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமித் கூறுகையில், “கேஜ்ரிவால் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் இருந்தே எனது மொபைல் எண்ணுக்கு “மிஸ்டு கால்”கள் வரத் தொடங்கின.

ஒரு மணி நேரத்தில் குறைந்தது ஐந்நூறு கால்கள் என பெரிய தொல்லையாகி விட்டது. இது குறித்து கேஜ்ரிவாலுக்கு புகார் அனுப்பியுள்ளேன்” என்றார்.

தற்போது ஒரே மொபைல் எண் யாருக்கும் தரப்படுவது இல்லை. இந்நிலையில் இருவருக்கு வழங்கப்பட்டது வியப்புக் குரியதாகவே உள்ளது.

இது நடப்பது சாத்தியமா?

தனியார் செல்போன் நிறுவன அதிகாரி கூறியதாவது: ஒரே எண்ணில் இரு செல்போன் இனணப்புகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை, விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட எண்கள் தவறாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அல்லது, அந்த எண்ணில் இருந்து மும்பை இளைஞரின் செல்போன் எண்ணிற்கு கால் ஃபார்வர்ட் செய்யப்பட்டிருந்தால்தான் இது சாத்தியம் என்றார்.

SCROLL FOR NEXT