நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நேற்று பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் நேரிலும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:
பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்: கடந்த மூன்றாண்டுகளில் 105 குடிமைப்பணி அதிகாரிகள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் (வனத்துறை) உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 45 அதிகாரிகள் ஐஏஎஸ் ஆக சேர்வதற்காக தங்கள் பணிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மற்றவர்கள், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். நீண்ட கால பயிற்சியில் இருந்து, ராஜினாமா செய்த இரு ஐஏஎஸ் அதிகாரிகளிடம் அவர்களுக்காக செலவிடப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. 45 பேர் இதர குடிமைப் பணியில் சேர்வதற்காகவே ராஜினாமா செய்ததால் அவர்களிடம் வசூலிக்கவில்லை.
பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்: பல்வேறு அமைச்சகங்கள், துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 1,832 பேர் போலியான சாதிச் சான்றிதழ்கள் மூலம் வேலை பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், 276 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 521 பேர் மீது வழக்கு நடைபெறுகிறது. 1,035 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது. விதிமுறைகளின்படி ஒருவர் போலி சாதிச் சான்று மூலம் வேலை நியமனம் பெற்றது கண்டறியப்பட்டால், அவர் அப்பணியில் தொடர்ந்து நீடிக்க முடியாது.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு: கடந்த 2015 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரயில்பாதைகளின் நீளம் 1,17,996 கி.மீ. அவற்றைப் புதுப்பிக்கும் பணி தொடர்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காக ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 183 கோடி ரூபாய் மதிப்பில் ராஷ்ட்ரீய ரயில் சன்ரக்ஷ கோஷ் உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
கட்டுமானப் பொறியியல் சொத்துகள், ரயில் பாதை புனரமைப்பு, பாலங்கள் புனரமைப்பு, ரயில்வே பாதைகளைப் பிரித்தல் உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர்: கடந்த 1984-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான வன்முறை தொடர்பாக பதிவான 650 வழக்குகளில் 49 வழக்குகள் மறு விசாரணை செய்யப்படவேண்டியவை என சிறப்பு புலனாய்வுக் குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை மீண்டும் விசாரிக்கப்படும்.