இந்தியா

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டுகள் சிறை

இரா.வினோத்

ரூ.10 கோடி அபராதம் | தகர்ந்தது முதல்வர் கனவு | பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக்குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த‌ தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னையில் நடை பெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த பெங்க ளூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா 2014, செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து நால்வரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட‌னர்.

இந்நிலையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015, மே 11-ம் தேதி நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி, அன்பழகன் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் 6 மாதங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா ஆகியோர் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்யக் கோரி வாதிட்டனர். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ் (தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி), சேகர் நாப்டே உள்ளிட்டோர் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரிக்கக் கோரி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதத்தையும், எழுத்துப்பூர்வ வாதத்தையும் ஆராய்ந்த நீதிபதிகள் கடந்த ஜூன் 7-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இதனிடையே கடந்த வாரம் கர்நாடக அரசின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தீர்ப்பு குறித்து நினைவூட்டியபோது, “இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும்’’ என நீதிபதி பினாகி சந்திரகோஷ் தெரிவித்தார். இவ்வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக் கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே நிலவும் மோதலால் தீர்ப்பின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஒருமித்த தீர்ப்பு

இந்நிலையில் நேற்று காலை உச்ச நீதிமன்றம் கூடியதும், நீதிமன்ற‌ அறை எண் 6-ல் வழக்கறிஞர்கள், பத்திரிகை யாளர்களின் கூட்டம் அலை மோதியது.சரியாக காலை 10.30 மணிக்கு இருக்கையில் அமர்ந்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் இருவரும் ஓரிரு நிமிடங்கள் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து நீதிபதி பினாகி சந்திரகோஷ் தீர்ப்பின் இறுதி பாகத்தை வாசித்தார். அவர் கூறிய போது, “ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான‌ கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நால்வரையும் விடுவிக்க முடியாது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெய லலிதா, சசிகலா உள்ளிட்ட நால் வரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவிக்கிறது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் இவ்வழக்கில் இருந்து அவரது பெயர் விடுவிக்கப்படுகிறது. ச‌சிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. மூவரும் உடனடியாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி அமிதவ ராய் கூறியபோது, “நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்பதை நீதிபதி குன்ஹா போதிய சான்றுகளுடன் நிரூபித்துள்ளார். எனவே கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இந்திய தண்டனை சட்டம் 120 (பி), 109 ஆகிய பிரிவின் கீழும், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத் துக்கு அதிகமாக சொத்துக்குவித்த தற்காக‌ ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (ஈ), 13(2) உள்ளிட்ட பிரிவு களின் கீழும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது.

அரசு பதவியிலும், அதிகார பொறுப்பிலும் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவதை ஏற்க முடி யாது. ஊழல் நாட்டையும், பொரு ளாதாரத்தையும், முன்னேற்றத் தையும் சீரழிக்க கூடியது. கடுமையான நடவடிக்கைகளின் மூலமாகவே ஊழலை ஒழிக்க முடியும்’’ என தெரிவித்தார்.

இரு நீதிபதிகளும் சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமாக, விரிவாக வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பில் ஊழல் அரசியல் வாதிகளுக்கு எதிராக கடுமை யான வார்த்தைகள் பிரயோகிக்கப் பட்டுள்ளன. இரு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வெளியிட்டுள்ள தால், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. தேவைப்பட்டால் சசிகலா தரப்பு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.

உச்ச நீதிமன்றத்தின் தண்டனை தீர்ப்பினால் சசிகலாவின் தமிழக முதல்வர் கனவு தகர்ந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின்படி குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட ஒருவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போது சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளதால் அடுத்த 10 ஆண்டு களுக்கு அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க முடியாது.

பெங்களூரு சிறை தயார்

சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மூவரும் தீர்ப்பின் நகல் கிடைத்த உடன் பெங்களூரு நகர குடிமையியல் நீதிமன்றத்தில் அறை எண் 48-ல் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மூவரையும் அடைப்பதற்கான சிறை அறைகள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோ ருக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் பெங்களூருவிலும், சென்னை யிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT