டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான வழிமுறைகளை மேற்கொள்பவர்கள் தேசத்துக்கு மிகப் பெரிய சேவையாற்றுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
பிரதி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற பெயரில் அகில இந்திய வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார்.
இந்த மாதத்துக்கான மனதில் குரல் நிகழச்சிக்காக அவர் பேசியதாவது:
''கடந்த சில மாதங்களாக நமது நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் செயல்படும் டிஜி-தன் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள். ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை எப்படி மேற்கொள்ள முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரித்தது.
பரம ஏழைகள் கூட இதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், மெல்ல மெல்ல ரொக்கமில்லாத முறையில் எப்படித் தொழில் செய்வது என்ற திசையை நோக்கி முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.
நாணய விலக்கலுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் தொகை செலுத்தல் முறையில் பல முன்னேற்றங்களைக் காண முடிகிறது. பீம் செயலியை ஆரம்பித்து 2-3 மாதங்களே ஆன நிலையில், இதுவரை சுமார் ஒண்ணரை கோடி மக்கள் இதைத் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
கறுப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போரில் நாம் முன்னேற வேண்டும். 125 கோடி நாட்டுமக்கள் இந்த ஆண்டு 2 ½ லட்சம் கோடி அளவு டிஜிட்டல்வழி பரிவர்த்தனையைச் செய்யும் உறுதி பூண முடியுமா? இதை செயல்படுத்த 125 கோடி நாட்டுமக்களும் விரும்பினால், இதற்காக ஓராண்டுக்காலம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, இதை ஆறே மாதங்களில் கூட செய்து விட முடியும்.
இதை செயல்படுத்தும் வகையில் நாம் பள்ளிக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம், நாம் ரயிலிலோ, விமானத்திலோ செய்யும் பயணத்துக்கான பயணச்சீட்டுக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளலாம், மருந்துகளை டிஜிட்டல் முறையில் வாங்கலாம், நாம் மலிவுவிலை உணவுப்பொருட்கள் கடையை நடத்துபவர் என்றால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.
நமது அன்றாடச் செயல்பாடுகளில் இவற்றை நாம் கைக்கொள்ளலாம். இதன் மூலம் மக்கள் தேசத்துக்கு மிகப் பெரிய சேவையாற்றுகிறார்கள். கறுப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் கள வீரர்களாக செயல்பட வேண்டும்.
பீம் செயலி பற்றிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ரொக்கப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நமது பங்களிப்பு அமைய வேண்டும்'' என்று மோடி பேசினார்.