நீங்கள் தத்தெடுக்கும் கிராமம் உங்களுடையதாகவோ, உங்கள் சொந்தங்களுடையதாகவோ இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி நகைச்சுவையுடன் அறிவுறுத்தியுள்ளார்.
எம்.பிக்கள் மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். "எம்.பிக்கள் எந்த வகையான கிராமத்தையும் தத்தெடுத்து, அதை மாதிரி கிராமமாக மாற்றலாம். 3,000 முதல் 5,000 வரை அந்த கிராமத்தின் மக்கள் தொகை இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். மேலும் தத்தெடுப்பதற்கான விதிமுறைகள் ஒவ்வொரு எம்.பிக்களிடமும் தனி புத்தகமாக அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி பேசும்போது, "ஒரே ஒரு நிபந்தனை. உங்கள் கிராமத்தையோ, உங்கள் சொந்தங்களின் கிராமத்தையோ தத்தெடுக்காதீர்கள்" என்று கூற, அமர்ந்திருந்தவர்கள் இடையே சிரிப்பலை எழுந்தது.
நாடாளுமன்றத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் கிராமத்தைத் தத்தெடுத்து, 2019-ஆம் ஆண்டிற்குள் அதை முன் மாதிரி கிராமமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.