இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: சாத்வி பிரக்யா சிங் ஜாமீன் மனு தள்ளுபடி

பிடிஐ

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் முஸ்லிம் மக்கள் நிறைந்த பகுதியில் கடந்த 2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். குண்டுவெடிப்பு நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாத்விக்கு சொந்தமானது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் குற்றவாளிகள் 5 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தினால் கடந்த மே, 13-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முடிவை தேசிய புலனாய்வு முகமை கைவிட்டது. மேலும் இவ்வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் சாத்வி தாக்கல் செய்த ஜாமீன் மனு தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.டி.தேகாலே முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாத்வி பிரக்யாவுக்கு சொந்தமானது தான். ஆனால் அதை ராமச்சந்திர கல்சங்கரா என்பவர் தான் பயன்படுத்தி வந்தார். தற்போது அவர் தலைமறைவாகவுள்ளார். மேலும் இவ்வழக்கில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு போலீஸாரின் மிரட்டலுக்கு பயந்து சாத்விக்கு எதிராக பலர் சாட்சியம் அளித்துள்ளனர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என வாதாடினார்.

மேலும் சாத்விக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு முகமை சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் நீதிபதி சாத்விக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன், அவரது மனுவையும் தள்ளுபடி செய்தார்.

SCROLL FOR NEXT