தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வறுமை ஒழிப்புக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப்பெரியது, ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்’. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்துக்கு இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று மக்களவையில் அறிவித்தார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 5 கோடி குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து ஏற்பட்டுள்ள தேக்கநிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் கிராமப்புறங்களுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதன்மூலம் கிராமங்களில் மக்களின் செலவிடும் சக்தியை அதிகரிக்க இத்திட்டம் உதவிடும்.
கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் சாலைகள் போடுதல், கிணறு, ஏரிகளை தூர் வாருதல் உட்பட பல்வேறு நலப்பணிகள் செய்யப்படுகின்றன. இத்திட்டத்தின்படி கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு குறைந்தபட்ச சம்பளத்துடன் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தால் கிராமப் பெண்கள் பெரிதும் பலன் அடைந்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்கள். இதன்மூலம் கிராமங்களில் ஊட்டச்சத்து குறைப்பாடு கணிசமாக குறைந்துள்ளது, குழந்தை தொழிலாளர்கள் குறைந்துள்ளனர் என்று தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.