இந்தியா

பரஸ்பரம் சம்மதத்துடன்தான் நடந்தது: தருண் தேஜ்பால்

செய்திப்பிரிவு

தன்னுடன் பணியாற்றிய பெண் பத்திரிகையாளரிடம் தான் அத்துமீறி நடக்கவில்லை, சம்பவம் இருவரது சம்மதத்துடனேயே நடந்தது என தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 7-8 தேதிகளில் கோவாவில் தெஹெல்கா இதழ் நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர விடுதியில் நடந்தது. அப்போது, விடுதியில் இருந்த லிஃப்டுக்குள் தேஜ்பால் பெண் நிருபரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான புகார்.

இந்த குற்றச்சாட்டை அடுத்து கோவா போலீசார் அவரை கைது செய்து 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே 2 முறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேஜ்பாலுக்கு இன்று 3-வது முறையாக மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது.

விசாரணைக்கு தேஜ்பால் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பதாகக் காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இருப்பினும், பெண்ணிடம் பாலியல் ரீதியாக தாம் அத்துமீறி நடக்கவில்லை என்பதை தேஜ்பால் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

விரைவு நீதிமன்றத்தில் தேஜ்பால் வழக்கு

இதனிடையே, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், "தேஜ்பால் மீதான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம். பெண் நீதிபதி ஒருவரும் வழக்கை விசாரிப்பார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கப்படும். தேஜ்பால் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அவரது முந்தைய பதவி கருதி, அவரை நாங்கள் தவறாக நடத்தமாட்டோம்" என்றார்.

இந்நிலையில் பனாஜியில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் நிருபர் தன்னிடம் தேஜ்பால் தவறாக நடந்துகொண்டது தொடர்பாக தனது சகாக்கள் மூவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர்கள் மூவரும் இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் பனாஜி மாஜிஸ்திரேட் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வாக்குமூலம் அளிப்பார்கள்.

தெஹல்கா முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு, கோவா போலீஸ் முன் சனிக்கிழமை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறது. நாங்கள் தேஜ்பாலிடம் விரிவாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தருகிறார்" என்றார் அவர்.

SCROLL FOR NEXT