இந்தியா

லோக்பால்: ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

லோக்பால் மசோதாவை நிறை வேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே (76) தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிர தத்தைத் தொடங்கினார்.

கடந்த 2011 ஆகஸ்டில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே 16 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகியது. உண்ணாவிரத மேடையில் பெருந்திரளான மக்கள் குவிந்தனர். அரசின் வேண்டு கோளை ஏற்று அப்போது அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

லோக்பால் மசோதா தொடர்பாக இதுவரை அவர் 3 முறை கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.

தற்போது 4-வது முறையாக மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டம், ராலேகான் சித்தி கிராமத்தில் உள்ள யாதவ் பாபா கோயில் வளாகத்தில் அவர் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் சார்பில் வருவாய் துறை அமைச்சர் பால்சாகேப் திரோட் மேடைக்கு வந்து, உண்ணாவிரதத்தை கைவிடு மாறு ஹசாரேவிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் தனது போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் ஹசாரே கூறியது:

உண்ணாவிரதத்தைத் தொடங்கும் முன்பு எங்கள் ஊர் கோயிலில் பிரார்த்தனை செய்தேன். அப்போது, கடவுளே, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு புத்தியைக் கொடு என்று வேண்டிக் கொண்டேன். லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் பதவியை விட்டு விலக வேண்டும்.

மதவாத கலவர தடுப்பு மசோ தாவை நிறைவேற்ற பிரதமர் மன்மோகன் சிங் உறுதி பூண்டுள்ளார். அதேபோல் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அவர் உறுதி மேற்கொள்ளாதது ஏன்?

கடந்தமுறை டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதத்தில், லோக்பால் மசோதாவை நிறை வேற்ற அரசு தயாராக இருக்கிறது, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அவரை நம்பி நான் உண்ணா விரதத்தை நிறைவு செய்தேன். ஆனால் மத்திய அரசு என்னையும் மக்களையும் ஏமாற்றும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

காங்கிரஸுக்கோ பாஜகவுக்கோ லோக்பால் மசோதாவை நிறை வேற்றும் எண்ணம் இல்லை. மாற்றம் தேவையெனில் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் நாட்டைக் காப்பாற்ற முடியும்.

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப் பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட உண்ணாவிரதப் போராட்டத்துக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. உண்ணாவிரத மேடைக்கு யார் வந்தாலும் கட்சியின் அடையாளம் இன்றி வர வேண்டும் என்றார்.

அமைச்சர் நாராயணசாமி பேட்டி

மத்திய இணையமைச்சர் நாராயணசாமி டெல்லியில் செய்தி யாளர்களிடம் பேசியபோது, லோக்பால் மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்துள்ளேன். எதிர்க்கட்சிகளால்தான் மசோதா நிறை வேறவில்லை என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT