தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு அருகே அதிமுகவினர் நேற்று மொட்டை அடித்தும், உண்ணாவிரதம் இருந்தும் போராட்டம் நடத்தினர். அப்போது திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூரை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10 தினங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவரைக் காண்பதற்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் குவிகின்றனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை ஜெயலலிதாவை பார்ப்பதற்காக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை மற்றும் அமைச்சர் வளர்மதி ஆகியோர் வந்தனர். மாலை 5 மணி வரை காத்திருந்தும் அவர்களை காண ஜெயலலிதா விரும்பாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
'மொட்டை' ஆர்ப்பாட்டம்
இதனிடையே, சிறை வளாகத் துக்கு அருகே குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கர்நாடக மாநில அதிமுகவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவும், பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும் கர்நாடக அரசை கடுமையாக விமர்சித்து கன்னட தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர்.
இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என சகல மதத்தினரும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் பரப்பன அக்ரஹாராவில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிறப்பு யாகமும் செய்தனர். இதனால் சிறையைச் சுற்றுயுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருப்பதால், ஆயிரக்கணக்கான அதிமுகவினர் சிறைக்கு அருகே கூட வாய்ப்பு உள்ளது.
எனவே அவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் விதமாக பரப்பன அக்ரஹாரா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.