இந்தியா

பீட்டாவின் விருதை பெற்றுக்கொண்ட விவகாரம்: முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பிடிஐ

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பின் விருதை பெற்றுக்கொண்ட தற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இருந்தபோது, அவரது தலைமையிலான அமர்வு கடந்த 2014, மே மாதம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

இதற்காக பீட்டா அமைப்பின் ‘ஆண்டின் சிறந்த மனிதர் (மேன் ஆஃப் தி இயர்)’ விருது கடந்த 2015-ல் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

இதற்கு எதிராக சாலை சக்கரபாணி என்ற விவசாயி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் “நீதிபதிகள் தங்கள் தீர்ப்புக்காக எவரிடம் இருந்தும் எந்தொரு ஆதாயமும் பெறக்கூடாது. இந்த விருதை பெற்றுக்கொண்டதன் மூலம் அரசியல் சட்ட விதிகளை கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீறிவிட்டார். அவர் தனது விருதை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், “அரசியலமைப்புச் சட்ட விதிகள், நீதிபதிகள் பாதுகாப்பு சட்டத்தை முறையாக கவனத்தில் கொள்ளாமல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா வாதிடும்போது, “ஓய்வுக்கு பிறகு நீதிபதி தனிநபர் ஆகிறார். எனவே அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது தவறு” என்றார்.

இதையடுத்து உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக விவசாயி சாலை சக்கரபாணி பதில் அளிக்க உத்தரவிட்டனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது இந்த வழக்கு தொடரப்பட்டது.

SCROLL FOR NEXT