இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் பாரிக்கர் உறங்கியதாக சர்ச்சை

ஐஏஎன்எஸ்

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கிடையில், பாரிக்கர் உறங்கினார் என கோவா சுரக்‌ஷா மன்ச் தலைவர் ஞானஷ்யாம் ஷிரோத்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கண்கள் மூடி, தலையை கவிழ்ந்தபடி இருந்த படம் இணையத்தில் வைரலானது.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஷிரோத்கர், ''குடியரசு தின நிகழ்ச்சியில் பாரிக்கர் உறங்கியது கோவா மற்றும் இந்தியாவுக்கே அவமானத்தை அளிக்கிறது.

பாரிக்கர் எப்போதும் கோவாவில்தான் இருக்கிறார். பாஜகவின் அடிமட்டக் கூட்டங்களில் கூட கலந்துகொண்டு பிரச்சாரம் செய்கிறார். இது வேறெங்காவது நடக்குமா? எல்லாப் பொறுப்புகளையும் நம் தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டால் அதிகச்சுமை ஏற்படும். அதனால்தான் முக்கியமான நிகழ்விலேயே அவர் உறங்கியிருக்கிறார்'' என்றார்.

கோவா சுரக்‌ஷா மன்ச், கோவா மாநில முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் வெலிங்கரின் வழிகாட்டுதலில் இயங்கிவருகிறது. பாஜகவின் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர் வெலிங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவின் முன்னாள் முதல்வரான பாரிக்கர், 2014-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஃபிப்ரவரி 4-ம் தேதி கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT