இந்தியா

அவப்பெயரை ஏற்படுத்தும் கன்னட தனியார் சேனல்கள்: கர்நாடக சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சி எம்எல்ஏ.க்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கர்நாடக சட்டப்பேரவை நிகழ்வு களைக் கன்னட சேனல்கள் பூதாகரமாக காட்டி மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்துவதாக அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க் களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 2012-ல் சட்டப்பேரவை கூட்டம் நடந்தபோது, பாஜக அமைச்சர்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண் சவதி உள்ளிட்ட 3 பேர் ஆபாச வீடியோ பார்த்த காட்சியை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியது. இதையடுத்து, மூவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த 2014-ல் பேரவையில் இருந்தபடி பாஜக எம்எல்ஏ பிரபு, சவான் காங்கிரஸ் பெண் தலைவரின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியையும் தனியார் சேனல்கள் ஒளிப்பரப்பின. விவாத நேரத்தில் உறுப்பினர்கள் செல்போனில் ‘கேம்' விளையாடியதையும் அவ்வப்போது ஒளிபரப்பின.

கர்நாடக முதல்வர் சித்த ராமையா அவையில் அடிக்கடி உறங்குவது போன்ற காட்சியும்‌ ஒளிபரப்பாயின. இதேபோல முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா (பாஜக), குமாரசாமி (மஜத) தூங்கியதும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில கல்வி அமைச்சர் தன்வீர் சேட், செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக செய்தி வெளியாயின. எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு அவருக்கு ஆபாச படம் அனுப்பி, தனியார் சேனலை படம்பிடிக்க வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவையில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. இதில் பாஜக எம்எல்ஏ ரமேஷ் குமார் கவுடா பேசும்போது, “சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் ஊடகங்கள் மித மிஞ்சிய சுதந்திரத்தோடு செயல் பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் பரபரப்பு செய்திகளைப் போட்டு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றன” என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ உக்ரப்பா கூறும்போது, “கன்னட‌ சேனல் களும், ஆங்கில சேனல்களும் சட்டப்பேரவையில் நடக்கும் சாதாரண சம்பவங்களைக் கூட, பெரிய சர்ச்சையாக மாற்றி விடுகின்றன” என்றார்.

மஜத எம்எல்ஏ மகேஷ் கூறும் போது, “தனியார் சேனல்களை சட்டப்பேரவையில் அனுமதிக்கக் கூடாது. கர்நாடக அரசு தனியாக சேனல் தொடங்க வேண்டும்” என்றார்.

கர்நாடக ஜனதா கட்சியின் எம்எல்ஏ பி.ஆர்.பாட்டீல் பேசும்போது, “கன்னட தனியார் சேனல்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். இல்லாவிடில் அரசியலை விட்டே வெளியேறி விடுவோம்” என்றார். இதற்கு அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்வர் சித்த ராமையா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலை உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் அவையில் வாசித்தார். அப்போது, “சட்டப்பேரவை நிகழ்ச்சிகளையும், அரசு நிகழ்ச்சிகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க அரசு சார்பில் சேனல் தொடங்க சட்ட திருத்தம் கொண்டுவரவும் தயார்” என்றார்.

சபாநாயகர் கோலிவாட் பேசும்போது, “உறுப்பினர்கள் எழுப்பிய இந்த பிரச்சினை குறித்து பேரவைக்குழு ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT