இந்தியா

நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா

செய்திப்பிரிவு

செவ்வாய் கிரகத்துக்கு நவம்பர் 5-ம் தேதி 'மங்கள்யான்' விண்கலம் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.

மங்கள்யான் விண்கலத்தை ஏவுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து வரும் நவம்பர் 5-ம் தேதி மதியம் 2.36 மணியளவில் விண்கலத்தை ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் சுமந்து செல்லும்.

1,350 கிலோ எடையுள்ள இந்த விண்கலத்தில் அறிவியல் ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் செவ்வாயின் சுற்றுச்சூழல், கனிமவளம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும்.

பூமியிலிருந்து ஏவப்பட்ட பின் 10 மாதங்கள் விண்வெளியில் பயணம் செய்து 2014 செப்டம்பர் மாதம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை மங்கள்யான் விண்கலம் அடையும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து, அங்கு மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயும். செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதிகளை படம் எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பிவைக்கும்.

உயிர்கள் உருவாவதற்கு ஆதாரமாக உள்ள மீத்தேன், செவ்வாய் கிரகத்தில் இருக்கிறதா என்பதை ஆராய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மீத்தேன் இருப்பதை கண்டறிவதற்கான ஆய்வுக் கருவி இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மங்கள்யான் திட்டத்துக்கு ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மங்கள்யான் விண்கலத்தை ஏவுவது குறித்து அக்டோபர் 19-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT