பாரதிய ஜனதாவின் சந்நியாசி எம்பியான சாக்ஷி மஹராஜ் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து கூறி சிக்கலுக்குள்ளாகி உள்ளார். இவரது மீரட்டின் பேச்சால், உபி போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உபியின் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அம்மாநிலத்தின் மீரட்டில் சாதுக்கள் சபையின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் சாதுவுமான சாக்ஷி மஹராஜ் உரையாற்றினார். இதில் அவர், ‘நம் நாட்டின் மக்கள் தொகைக்கு இந்துக்கள் காரணம் அல்ல. இதற்கு 4 மனைவிகள் மற்றும் 40 குழந்தைகள் பெற அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் காரணம்.’ என தெரிவித்தார். இது முஸ்லீம்களை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சிக்கப்பட்டு இருப்பதாக உபியின் மீரட் அரசு நிர்வாகம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஐபிசி 298, 188, 295-ஏ மற்றும் 153 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது உபியின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கப்படும் நிலையில் தேர்தல் ஆணையமும் தானாக முன்வந்து சாக்ஷி மஹராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இவரது பேச்சை, பாஜகவின் தேசிய துணைத்தலைவரும் மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வீ கண்டித்துள்ளார். இது போன்ற மதரீதியான கருத்துக்களை பாஜக ஆதரிப்பதில்லை எனத் தெரிவித்தார். மஹராஜின் கருத்தை உபியின் அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர். இத்துடன் அவரது மக்களவை உறுப்பினர் பறிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் உபி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரும் எம்.எல்.சியுமான தீபக்சிங் கூறுகையில், ‘பிரதமர் நரேந்தர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமல் இருப்பதை திசைதிருப்பும் வகையில் பாஜக தலைவர்களால் இதுபோன்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன. வன்முறை தூண்டும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தை பற்றி கூறுவது கிரிமினல் குற்றம் ஆகும். இதற்காக சாக்ஷி மஹராஜின் எம்பி பதவி பறிக்கப்பட வேண்டும். இவர் மீது காங்கிரஸும் புகார் செய்து வழக்கு பதிவு செய்யும்.’ எனத் தெரிவித்தார்.
சாக்ஷி மஹராஜ் யார்?
உபியில் காவி உடைந்த சர்ச்சை சாதுவாகக் கருதப்படுபவர் பாரதிய ஜனதாவின் உன்னாவ் தொகுதி எம்பியான சச்சிதானந்த் ஹரி சாக்ஷி எனும் சாக்ஷி மஹராஜ். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் உறுப்பினராக இருந்த சாக்ஷி மஹராஜ், 1991-ல் முதன் முதலாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிறகு மீண்டும் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பரூக்காபாத்தின் மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இதில் ஒருமுறை தனது தொகுதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி மக்களவையில் இருந்து நீக்கப்பட்டார்.
அயோத்தியாவின் பாபர் மசூதி இடிப்பிலும் இடம் பெற்றவரான இவர், உபியின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். காரணம், அவர் மீது 2000 ஆம் ஆண்டில் இரண்டு பெண்களால் அளிக்கப்பட்ட பாலியல் பலாத்காரப் புகார். இதில் கைதானவர் திஹார் மற்றும் உபியின் ஏட்டா சிறையில் ஒரு மாதம் அடைக்கப்பட்டார். பிறகு இந்த வழக்கில் சாக்ஷி மஹராஜுக்கு எதிரான சாட்சிகள் இல்லை என 2001-ல் விடுவிக்கப்பட்டார்.
ஏப்ரல் 15, 2013-ல் தனது சீடராக இருந்த 47 வயது கல்லூரி முதல்வரான சுஜாதா வர்மா உபியின் ஏட்டாவில் சுட்டுக் கொல்லப்பட்ட போது அதை செய்ததாக சாக்ஷி மஹராஜ் மற்றும் அவரது சகோதரருடன் இரண்டு பேர் மறுநாளே கைது செய்யப்பட்டனர். இடையில் உபியின் பகுஜன்
சமாஜ் மற்றும் கல்யாண்சிங்கின் ராஷ்டிரிய கிராந்த் கட்சியில் இருந்தவர், அங்கு ஆளும் சமாஜ்வாதி கட்சியிலும் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்து தற்போது அதன் உன்னாவ் தொகுதி மக்களவை உறுப்பினராக இருக்கிறார். உபியில் ஒரு பள்ளி மற்றும் கல்லூரியை நிறுவி நடத்தி வரும் சாக்ஷி மஹராஜ், தனது அதிரடி பேச்சுக்களால் சர்ச்சைக்குள்ளாகி வருபவர்.
சுமார் இருவருடங்களுக்கு முன் இதே மீரட் நகரில் தன் கருத்தை வலியுறுத்திய சாக்ஷி மஹராஜ், ஒவ்வொரு இந்து பெண்ணும் தன் மதத்தை காக்கும் பொருட்டு குறந்தது 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் பிறகு, மகராட்டிராவின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மஹராஜ், நம் தேசத்தந்தை மஹாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த பிரச்சனை நாடாளுமன்ற மக்களவையில் எதிர்கட்சிகள் எழுப்பிய போது மன்னிப்பு கோரியிருந்தார் சாக்ஷி மஹராஜ்