உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் பள்ளி ஒன்றில் மாதவிடாயைச் சோதனை செய்ய 70 மாணவிகளின் ஆடைகள் களையப்பட்ட சம்பவத்தினால் மாணவிகளின் பெற்றோர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முசாபர் நகரில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் பள்ளியில் உள்ள பெண் வார்டன் மாணவிகளை ஆடைகளைக் களைய வைத்து மாதவிடாய் குறித்து சோதனை செய்ய வற்புறுத்தியுள்ளார், ஆடைகளை களையவில்லையென்றால் அடிப்பதாகவும் மாணவிகளை மிரட்டியுள்ளார்.
இது குறித்து சி.என்.என் நியூஸ் 18 சானலுக்கு கூறிய பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், “கழிவறையில் ரத்தக்கறை இருந்தது” என்று கூறி யார் மாதவிடாய் என்று பார்த்து விடுவோம், ஆடைகளைக் களையுங்கள் என்று உத்தரவிட்டார், இது எங்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேதனையும் அதிர்ச்சியும் கலந்து அவர் தெரிவித்தார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட வார்டன், வழக்கம் போல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மறுத்துள்ளார். ”கழிவறைத் தரையில் ரத்தம் இருந்ததால் மாணவிகள் சரியாக உள்ளனரா என்று சரிபார்க்க விரும்பினேன். சில சமயங்களில் இளம் மாணவிகள் தங்கள் உடல் உபாதைகளை தெரிவிப்பதை கடினமாக உணர்வார்கள், அதனால் அவர்களை கேட்டேன்” என்று மறுத்துள்ளார்.
அவர் மேலும், “நான் படிப்பில் மிகவும் கண்டிப்பானவள், அதனால் மாணவிகளுக்கு என்னைப் பிடிக்காது. பிற ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை வேலையை விட்டு அனுப்ப இத்தகைய குற்றச்சாட்டை கிளப்பி விட்டுள்ளனர்” என்றார்.
உள்ளூர் கல்வித்துறை அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.