தமிழ்நாட்டுடன் காவேரி நதிநீரைப் பங்கிடும் விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் வன்முறைகள் வெடித்த பெங்களூரில், இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை இயல்பு நிலை திரும்பி வருகிறது.
பதற்றமான பகுதி என கண்டறியப்பட்ட 16 காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக பெங்களூரு காவல் ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதேவேளையில் மைசூரூ, மாண்டியா போன்ற பகுதிகளில் இன்னும் போராட்டங்கள் ஓயவில்லை. பெங்களூரு, மைசூரு முழுவதும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 பேருக்கு ஓரிடத்தில் கூடக்கூடாது, போராட்டங்கள் கூடாது, மேடை பொதுநிகழ்ச்சி கூடாது, மைக் பயன்படுத்தி பேச்சு பிரச்சாரம் கூடாது போன்ற தடை உத்தரவு பாதுகாப்பு காரணங்களுக்காக அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் நிலை குறித்துப் பேசிய காவல்துறை ஆணையர், ''சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் போக்குவரத்து வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. கடைகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. விரும்பத்தக்காத சம்பவங்கள் நடக்காத வகையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பேருந்துகள், டாக்ஸிகள், மெட்ரோ ரயில்களில் அலுவலகங்களுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களை நகரம் முழுவதும் காண முடிகிறது.
திங்கட்கிழமை இரவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, நகரின் பதற்றம் நிறைந்த 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்னும் நீடிக்கிறது.
இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்காதபோதும், சில தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களுக்கு இடையில் மைசூரு மற்றும் மாண்டியா பகுதிகள் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன'' என்று தெரிவித்தார்.
கலவரப் பின்னணி
தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி வரை காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து கன்னட அமைப்பினர் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பெங்களூருவில் உள்ள ஹெக்கனஹள்ளி, கெங்கேரி, காமாட்சி பாளையா உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) இரவு நடந்த வன்முறையில் போலீஸார் மீது கல்வீசியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப் பட்டது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உமேஷ் (25) என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே லக்கேரியில் போலீஸாரின் தடியடிக்கு அஞ்சி மாடியில் இருந்து குதித்த குமார் (32) மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார்.
கர்நாடகத்தின் மற்ற பகுதிகளில் பெரியளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. மைசூரு, மாண்டியா, ராமநகரா, சித்ர துர்கா ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சித்தராமையா - மோடி சந்திப்பு
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து காவேரி பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்குமாறு வலியுறுத்துகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கிய பின்னர் சித்தராமையா டெல்லி செல்வார் என்று கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.