இந்தியா

பாஜக பலூன் வெடித்துச் சிதறுவது உறுதி: ராகுல்

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் முடிவின்போது, பாஜக பலூன் வெடித்துச் சிதறுவது உறுதி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியீட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2004-ல் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பலூன் அடங்கியது போலவே இப்போதும் பாஜக பலூன் வெடித்துச் சிதறப்போவது உறுதி.

இந்தியாவுக்கு எதிராக உள்ள மோடியின் கொள்கைகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் காங்கிரஸ் செயல்படும். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவது, இந்தியாவுக்கு தீங்கு தரும்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான தோல்வி அடையப் போவதாக சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் அமையும். அப்போது, அனைவரும் மிரண்டு போவார்கள்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இதைபோலவே பாஜகவும்கூட சில மாநிலங்களில் கூட்டணி அமைக்கவில்லை. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் பாஜக கடும் வீழ்ச்சி காணும்.

காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடையும் என்றும், எங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அலை இருக்கிறது என்றும் 2009-ல் கூட கருத்துக் கணிப்புகள் ஆரூடம் கூறின. ஆனால், முடிவுகள் அவற்றைப் பொய்ப்பித்தன. உத்தரப் பிரதேசத்தில் வெறும் 5 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால், அந்த மாநிலத்தில் 22 தொகுதிகள் பெற்றோம்" என்றார் ராகுல் காந்தி.

SCROLL FOR NEXT