அந்தரத்தில் பறந்து பறந்து எதிரிகளை பந்தாடும் சினிமா ஹீரோவைப் போல, நம்ப முடியாத பல ‘அதிசயங்களை’ நிகழ்த்தும் நபராக, ராகுல் காந்தியை அவரின் கூட்டணிக் கட்சிகள் பார்க்கத் தொடங்கியுள்ளன. (அதுசரி, மன்மோகன் சிங்கைப் போன்று மௌனமாக இருந்து வந்த ராகுல் (எதிர்காலத்தில் பிரதமர் ஆவதற்கு இந்தத் தகுதி போதுமே) திடீரென வாயைத் திறந்து பேசியிருப்பதே ஓர் அதிசயம்தானே).
ஆனால், அவசரச் சட்டம் வாபஸ் ஆனதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள லாலு போன்ற வாய்த்துடுக்கானவர்கள் ராகுலைப் பார்த்துக் கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது நில பேர முறைகேடு புகார் எழுந்தபோது, ராகுல் எங்கே போனார்? ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேட்டுள்ளார் லாலு. அதுதானே, அப்போது ராகுல் எங்கே போனார்?
மற்றொரு கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளத்தின் தலைவர் அஜித் சிங்கும், ராகுல் மீது அதிருப்தியில் உள்ளார். ஜாட் இனத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று அஜித் சிங் கோரி வருகிறார். இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு ராகுல் ஆட்சேபம் தெரிவித்து வருகிறாராம்.
காங்கிரஸ் கட்சியால் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூன்றாவது அரசை வழிநடத்த முடியாமல் போய்விட்டால், கைவசம் வேறு சில திட்டங்களை வைத்துள்ளாராம் தேசியவாத காங்கிரஸின் சரத் பவார்.
மற்றொருபுறம், காங்கிரஸ் கூட்டணியில் சேர மேலும் சில நிபந்தனைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறாராம் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார். அவசரச் சட்டத்துக்கு எதிராக இவரும் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது (லாலுவுக்கு எதிராக ஒரு விஷயம் கிடைத்த பின்பு, அதை சும்மா விடுவாரா நிதீஷ்).
ஆக, கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமல்ல, சேர விரும்பும் கட்சிகளும் அதிருப்தியில்தான் உள்ளன, தங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால்.