ஒடிசாவில் புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் பார்வையிடச் சென்ற முதல்வர் நவீன் பட்நாயக்கின் வாகனத்தை மறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புயல் நிவராணப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கு, ஒடிசாவின் கடலோரப் பகுதிகளுக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் சென்றார்.
முதல்வர் நவீன் பட்நாயக்கின் வாகனம், அகஸ்டினுவாகாவ் என்ற கிராமத்தைத் தாண்டி சென்றுகொண்டிருந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
நவீன் பட்நாயக்கின் வாகனம் செல்ல முடியாத வகையில், புயலில் விழுந்த மரங்களை பாதையில் போட்டு அவர்கள் வழிமறித்தனர். தங்கள் கிராமத்தில் உள்ள நிவாரண மையத்தைப் பார்வையிடாமல் சென்ற கோபத்தில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
தங்கள் கிராமத்துக்குப் போதுமான அளவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், உணவும் தண்ணீரும்கூட கிடைக்கவில்லை என்று கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.
அதன்பின், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, முதல்வரின் வாகனம் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“மக்களின் கவலைகளும் துயரங்களும் புரிகிறது. எங்களால் இயன்றவரை உரிய நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார் கஞ்சம் டி.ஐ.ஜி அனுராக் தாகூர்.
முதல்வரின் வாகனம் நிறுத்தப்பட்டது குறித்து பேரம்பூர் எம்.பி. மஹாபத்ரா கூறுகையில், “தங்கள் இடத்தில் முதல்வர் பார்வையிடவில்லை என்ற கோபத்தில் மக்கள் அப்படிச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் கிடைக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்” என்றார்.