ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வரும் வியாழக்கிழமை (ஜூன் 22) கூடி ஆலோசிக்க உள்ளன.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் நேற்று டெல்லியில் இதனை கூறினார். அப்போது அவர், “ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறும்போது, “குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் பேச 3 உறுப்பினர் குழுவை பாஜக அமைத்திருந்தது.
இக்குழுவில் இடம்பெற்ற மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் எங்களைச் சந்தித்தபோது எவரது பெயரையும் பரிந்துரைக்கவில்லை. தற்போது ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதை நாங்கள் எதிர்க்கிறோம். என்றாலும் இந்த விவகாரத்தில் எங்கள் கட்சியிலும் பிற எதிர்க்கட்சிகளிடம் ஆலோசிப்போம். இதுபற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரைவில் கூடும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை பங்கேற்க உள்ளன.