இந்தியா

உ.பி. முதல்வருடன் பிரகாஷ் காரத் திடீர் சந்திப்பு

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேச முதல்வர்அகிலேஷ் யாதவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் செவ்வாய்க்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார்.

முஸாபர்நகர் மாவட்டத்தில் நடந்த வகுப்பு கலவரத்தின்போது பாதிப்புக்குள்ளாகி நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை முதல்வரிடம் தான் எழுப்பியதாக அவர் சொன்னார்.

மக்களவைத் தேர்தலுக்காக 3வது அணி அமைப்பது பற்றி முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு காரத் மறுத்தார்.

முதல்வரைச் சந்தித்துவிட்டு திரும்பியதும் நிருபர்களிடம் காரத் அளித்த பேட்டி வருமாறு:

முஸாபர்நகர் மாவட்ட வகுப்பு கலவரத்தில் பாதிப்புக்குள்ளாகி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் பற்றி முதல்வரிடம் விவாதித்தேன். இது பற்றிய சில விவரங்களை முதல்வரிடம் நான் கொடுத்தேன். முகாம்களில் உள்ளவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்பதை முதல்வரிடம் வலியுறுத்தினேன்.

வரும் மக்களவைத் தேர்தலுக்காக 3வது அணி அமைப்பது குறித்து இந்த சந்திப்பில் பேசவே இல்லை. தேர்தலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆயத்த வேலைகளை தொடங்கிவிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றார் பிரகாஷ் காரத்.

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 2வது இடம்பெற்றது பற்றி கேட்டதற்கு, தங்களது தேர்வுக்கு பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் வரும்போது அவற்றையே வாக்காளர்கள் ஆதரிக்கின்றனர் என்பதற்கு இது உதாரணம்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையப்போவது உறுதி. நாட்டில் பலம் வாய்ந்த பிராந்திய கட்சிகள் உள்ளன என்றார் பிரகாஷ் காரத்.

SCROLL FOR NEXT