முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை என்று டெல்லி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இரவு தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஒட்டலில் சடலமாக கிடந்தார். பல மாதங்களாக விசாரணை நடந்துவரும் நிலையில் அவரது மரணம் குறித்து முடிவு ஏற்படாம உள்ளது
இந்த நிலையில் அவரது மரணத்துக்கு விஷமே காரணம் என்று வியாழக்கிழமை அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு அளித்த புதிய அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து இன்று இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி காவல்துறை ஆணையர் பஸ்ஸி கூறும்போது, "சுனந்தாவின் இறப்பு குறித்த காரணம் இன்றைய தேதி வரையில் உறுதியாகாமல் உள்ளது. உண்மையை வெளிக்கொண்டுவர விசாரணை நடந்து வருகிறது. தக்க காரணம் தெரியும்வரை இந்த விசாரணை நிலை தொடரும்" என்றார்.
முன்னதாக சுனந்தா புஷ்கரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்த மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகம், அவர் விஷம் குடித்து இறந்ததற்கான வாய்ப்பு உள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
எனினும், அந்த ஆய்வறிக்கை முழுமையானதாக இல்லை என்று கூறிய காவல்துறை, மீண்டும் ஆய்வு நடத்துமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவை கேட்டுக்கொண்டது.
இதனிடையே சுனந்தா மரணத்தில் முடிவு ஏற்படாத நிலையில் புதிதாக மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கோரியுள்ளார்.