இந்தியா

பாஜக அலை வீசுவதால் அகிலேஷ் அச்சம்: உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல்

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அலை வீசுவதால் முதல்வர் அகிலேஷ் யாதவ் அச்சமடைந்து பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அலிகர் நகரில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு தவறிவிட்டது. இதனால் பெண்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மாநில வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் ஊழல், சாதி மோதல், குடும்ப ஆட்சி ஆகியவற்றை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதால் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என அச்சமடைந்துள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பிற கட்சிகளுடன் (காங்கிரஸ்) கூட்டணி அமைத்துள்ளார்.

மின்சார உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் புகழ்பெற்ற அலிகர் பூட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மின்சாரம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அத்துடன் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்.

மேலும் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்து வருகின்றன.

உ.பி. தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது நடந்துவிட்டால் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவேதான் எதிர்க்கட்சிகள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இளைஞர்கள் அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதுடன் எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் சிபாரிசையும் பெற வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஏழைகள் தங்களது நிலம் மற்றும் இதர சொத்துகளை அடமானம் வைக்க வேண்டி உள்ளது. இதைத் தடுக்க வேண்டும்.

மத்திய அரசைப் பொறுத்தவரையில் இந்த நிலையைத் தடுப்பதற்காக சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் தகுதி அடிப்படையில் கணினி மூலமே பணி நியமனம் செய்யப்படுகிறது'' என்று மோடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT